கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில், கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவரை, மனைவியே கூலிப்படை வைத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையை மறைக்க அதை விபத்து போலச் சித்தரிக்க முயன்ற தம்பதியின் திட்டம் போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

யாதகிரி தாலுகா, சமனஹள்ளி தாண்டா பகுதியைச் சேர்ந்தவர் சாகர் ரத்தோடு (35). இவரது மனைவி பூஜா. இவருக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த ரெட்டி ரத்தோடு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கிராமப் பஞ்சாயத்தில் பலமுறை முறையிடப்பட்டும், பூஜா தனது காதலனை விட்டுப் பிரிய மறுத்து, அவருடன் மூன்று முறை வீட்டை விட்டு ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

தங்களது கள்ளக்காதலுக்குக் கணவர் சாகர் ரத்தோடு பெரும் தடையாக இருப்பதை உணர்ந்த பூஜா மற்றும் அவரது காதலன் ரெட்டி ரத்தோடு, அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டனர்.

இதற்காக கொலை செய்வதற்காக மகேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநரை அணுகிய காதலன், அவருக்கு ரூ.1 லட்சம் கூலி வழங்கி சாகரை கொல்ல ஒப்பந்தம் செய்துள்ளனர்.

திட்டமிட்டபடி, கடந்த மார்ச் 22-ஆம் தேதி இரவு, வாடகை ஆட்டோ கிடைப்பதாகக் கூறி சாகரை வெளியே வரவழைத்துள்ளனர். ஆட்டோவில் லிங்கரி அருகே உள்ள ஆள் நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து சுத்தியலால் தாக்கி சாகரை மர்ம நபர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர்.

கொலையைத் தொடர்ந்து, சாகரின் உடலை காரில் ஏற்றி ஒசஹள்ளி பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி, ஒரு ஆட்டோ மூலம் காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது போல நாடகமாடினர். சாகர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக கூறினர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாருக்கு, இது விபத்தாகத் தெரியாமல் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து சாகரின் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்தபோது, கொலைக்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு மகேஷ் என்பவரிடம் தொடர்ந்து பேசியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகேஷைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கொலைக்கான முழுத் திட்டமும் வெளிச்சத்திற்கு வந்தது. மனைவி பூஜாவும், காதலன் ரெட்டி ரத்தோடும் இணைந்து சதி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, மூவரையும் கைது செய்த யாதகிரி கிராமியப் போலீஸார், அவர்களைச் சிறையில் அடைத்தனர்.