
வேளச்சேரியில் இருந்து தரமணிக்கு பைக்கில் சென்ற கல்லூரி மாணவர், கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதி உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தேவதர்ஷன் (19) என்பவர், வேளச்சேரியில் உறவினர் வீட்டில் தங்கி, அருகிலுள்ள தனியார் கல்லூரியில் வணிகவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று நள்ளிரவில் பைக்கில் தனியாக சென்ற அவருக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. 100 அடி சாலை வழியாக தரமணிக்கு சென்ற தேவதர்ஷன், பைக் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சாலை நடுவில் உள்ள தடுப்பில் மோதி கீழே விழுந்தார்.
இந்த விபத்தில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தேவதர்ஷன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தற்போது தேவதர்ஷனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடம் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.