அரசியல் கட்சி தொடங்கியதற்காக வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் நன்றி கூறியுள்ளார்.

நடிகர் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சியின் பெயரை நேற்று முன்தினம் (பிப்ரவரி2ம் தேதி) அறிவித்தார்.. அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை எனவும் விஜய் தெரிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலே இலக்கு எனவும் தெரிவித்துள்ளார். மேலும் நான் ஏற்கனவே ஒப்பு கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாக கருதுகிறேன் என தெரிவித்துள்ளார்.

கடைசியாக ஒரு படத்திற்கு மேல் நடிகர் விஜய் நடிக்கமாட்டார் என்பதால் அவரது ரசிகர்களுக்கு கவலையாக இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வந்ததை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து நடிகர் விஜய்க்கு பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள், திரை பிரபலங்கள்,  ரசிகர்கள் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள். அன்புடன் விஜய்” என தெரிவித்துள்ளார்.