கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யுனிஸ் பாஷா (33) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் திருமணமான சில மாதங்களுக்கு பிறகு தன் மனைவியை வரதட்சணை கேட்டு அவரும் அவருடைய பெற்றோரும் துன்புறுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் திருமணம் ஆன சிறிது நாட்களில் அந்த பெண் கர்ப்பமான நிலையில் இதனை அறிந்த வாலிபர் தன் மனைவிக்கு கருக்கலைப்பு செய்தார். இரண்டு முறை அவர் தன் மனைவிக்கு கருக்கலைப்பு செய்ததோடு மாமனாருக்கு மசாஜ் செய்ய வேண்டும் என அடித்து கொடுமைப்படுத்தி துன்புறுத்தியுள்ளனர்.

இதில் வாலிபருக்கு பண தேவை அதிகரிக்கும் போதெல்லாம் அவர் தன் மனைவியை அடித்து கொடுமைப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்ததோடு அரசியல் பிரமுகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் எனவும் தன் மனைவியை வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு அவருடைய மனைவி மறுப்பு தெரிவித்ததால் கிட்டத்தட்ட 5 முறை அவர் தன் மனைவிக்கு முத்தலாக் சொல்லியுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தப் பெண் தன் கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்த நிலையில் பின்னர் தன் கணவன் வீட்டிற்கு சென்றபோது துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அந்தப் பெண்ணின் கணவனுக்கு சில ரவுடிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் மனைவியை விருந்தாக்க நினைத்ததும் தெரிய வந்தது.

மேலும் இதைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.