ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா தோல்வியை சந்தித்து வரும் நிலையில் இன்று நடைபெறும் போட்டியிலாவது வெற்றி பெற்று வரலாற்றை மாற்றுமா என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டிலும் நல்ல தரமான வீரர்கள் இருக்கும் நிலையில் இரண்டு அணியும் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் சிறப்பான முறையில் இருக்கிறார்கள். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது.

தற்போது துபாய் மைதானத்தில் போட்டி தொடங்கிவிட்ட நிலையில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் இந்த டாசின் மூலம் ரோகித் சர்மா மீண்டும் மோசமான சாதனை படைத்துள்ளார். அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டி முதல் இன்று வரை நடைபெற்ற அனைத்து ஒருநாள் தொடர்களிலும் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வெல்வதில் தோல்வியை சந்தித்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக 14 முறை ரோகித் சர்மா டாஸ் பெறுவதில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். மேலும் டாஸ் வெல்வதில் அதிக தோல்வியை சந்தித்த கேப்டன் பட்டியலில் முதலிடத்தில் பிரையன் லாரா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.