ராமநாதபுரம் மாவட்டம் மங்கலகுடியில் நைனா முகமது என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இங்கு சித்ரா என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தனக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்வதற்கு முகமதுவை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது முகமது 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. முதலில் முன்பணமாக 1000 ரூபாய் கொடுத்த விவசாயி லஞ்சம் கொடுக்க விரும்பாமல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி முகமது மற்றும் சித்ரா ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முகமதுவையும், சித்ராவையும் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.