இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மீதுள்ள தனது அதிருப்தியை வெளிப்படையாகக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடக்க காலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘அறைந்த சம்பவம்’ மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பரத்தில் ஹர்பஜன் சிங் நடித்துள்ளார். அந்த விளம்பரம் அவர் ஸ்ரீசாந்தை அறைந்த பழைய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர் சுமார் ₹1 கோடி வரை வருமானம் ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீசாந்த் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, அந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து விளம்பரத்தில் நடித்த ஹர்பஜன், என்னை அழைத்து அதை ஒரு ‘ஸ்டோரியாக’ சமூக வலைதளத்தில் பகிருமாறு கூறினார். அதற்கு நான், ‘உங்களை நான் மன்னித்துவிட்டேன், ஆனால் அந்தச் சம்பவத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்’ என்று பதிலளித்தேன்.

மேலும் அவர் கூறுகையில், நமக்குத் தீங்கு செய்பவர்களை மன்னிப்பது பெருந்தன்மை, ஆனால் அதை மறந்துவிடக் கூடாது. மறந்தால் அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்வார்கள் என்பதற்கு ஹர்பஜனே சிறந்த உதாரணம் என்று சாடியுள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘பிளாக்’ (Block) செய்துவிட்டதாகவும், அவருக்கும் எனக்கும் இனி எந்த ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்றும் ஸ்ரீசாந்த் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.