2023 அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் உள்ள ரெயிம் பகுதியில் நடந்த நோவா இசை விழாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 370க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 30 வயதான ரோயி ஷாலெவ், தனது காதலி மாபால் ஆடம் மற்றும் நெருங்கிய நண்பர் ஹிலி சாலமோனை இழந்தார். தாக்குதல் தொடங்கியபோது, ராக்கெட் வெடிப்புகளால் இசை நின்றது. ரோயி, மாபால் மற்றும் ஹிலி ஒரு டிரக்கின் கீழ் மறைந்து இறந்தவர்கள் போல் படுத்திருந்தனர். ஆனால், ஹமாஸ் துப்பாக்கி ஏந்தியவர்கள் தாக்கியபோது, ரோயி தனது உடலை மாபாலுக்கு கேடயமாக வைத்து பாதுகாக்க முயன்றார்.
தோட்டா ஒன்று அவரது உடலைத் துளைத்து மாபாலின் இதயத்தைத் தாக்கி, அவர் உடனே இறந்தார். இந்நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து, 2025 அக்டோபர் 10 அன்று, ரோயி தனது காரில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நெதான்யா அருகிலுள்ள போலெக் கடற்கரையில் நடந்தது. அன்று அதிகாலை, அவர் இன்ஸ்டாகிராமில் எழுதினார்: “உண்மையிலேயே மன்னிப்புக் கோருகிறேன். இந்த வலியைத் தாங்க முடியவில்லை. உள்ளே எரிந்து கொண்டிருக்கிறேன், அதை அடக்க முடியாது. இந்த வலி முடிவடைய வேண்டும். நான் உயிருடன் இருக்கிறேன், ஆனால் உள்ளே அனைத்தும் இறந்துவிட்டது.”
இதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரைத் தேடினர், ஆனால் மீட்புக் குழுக்கள் அவரது காரை எரிந்த நிலையில் கண்டனர். 2023 இல் தாக்குதலுக்கு பிறகு, ரோயியின் தாயும் அதேபோல் காரில் தீயிட்டு தற்கொலை செய்திருந்தார். இந்த இழப்புகளால் ரோயி மன உளைச்சலில் ஆழ்ந்தார். நோவா சமூக அமைப்பு அவரை “வலிமையான, தைரியமான நபர்” என்று நினைவு கூர்ந்தது. இந்த சம்பவம், தாக்குதலில் உயிர் தப்பியவர்களின் மனநலப் பிரச்சினைகளை வெளிச்சம்போட்டு, ரோயியின் தந்தை இதை “தேசிய அவசரநிலை” என்று குறிப்பிட்டார்.
