புத்தர் ஞானம் பெற்ற புனிதத் தலமான பீகாரின் புத்தகயாவிற்கு, நீண்ட கால ஆசையோடு வந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கிருக்கும் மக்களின் வறுமையைக் கண்டு நிலைகுலைந்து போயுள்ளார். மஹாபோதி கோவிலில் தன்னார்வத் தொண்டு செய்வதற்காக வந்த அவர், கோவிலின் அமைதியையும் அழகையும் எதிர்பார்த்து வந்த நிலையில், கோவிலுக்கு வெளியே இருக்கும் மக்களின் கடினமான வாழ்க்கைச் சூழல் அவரைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சீரற்ற சாலைகளில் நடக்க முடியாமல் திணறிய அவர், “என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை” என்று வீடியோவில் கதறியது காண்போரை நெகிழ வைத்துள்ளது.
தொடர்ந்து அவர் பகிர்ந்த வீடியோவில், சாலையோரக் குடிசைகள், உடையில்லாமல் தாயின் கைகளில் இருக்கும் பச்சிளம் குழந்தைகள், வெறும் காலோடு பிச்சை எடுக்கும் சிறுவர்கள் எனப் புத்தகயாவின் இருண்ட பக்கம் வெளிச்சமிட்டுக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, 3 மற்றும் 4 வயதுக் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லாமல் தெருக்களில் பிச்சை எடுப்பதையும், ஆபத்தான முறையில் கயிற்றில் நடந்து சாகசம் செய்து காசு கேட்பதையும் கண்டு அவர் மிகுந்த வேதனை அடைந்துள்ளார். “இதுதான் இவர்களின் இயல்பான வாழ்க்கை என்பதைப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது” என்று பதிவிட்டுள்ள அவர், புத்தகயா மக்களின் முன்னேற்றத்திற்காக உலகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
