தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு இந்து கோவிலுக்கு நர்கீஸ் கான் என்பவர் அறங்காவலராக நியமிக்கப்பட்டார். இதில் நர்கீஸ் கான் என்பது இஸ்லாமியர் பெயர் என்பதால் ஒரு இஸ்லாமியரை தான் இந்து கோவிலும் அறங்காவலராக நியமித்துள்ளனர் என்று நினைத்து பாஜக மூத்த தலைவர் எச் ராஜா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கடுமையான எதிர்வினை ஆற்றினார். இது பற்றி அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் ஒரு கோவிலில் முஸ்லீமை அறங்காவலராக அறநிலையத்துறை நியமித்த நிலையில் இதே போன்று ஒரு மசூதி பொறுப்புகளில் ஒரு இந்துவை தமிழக அரசு நியமிக்குமா என்று கேள்வி எழுப்பினார்‌‌. அதோடு இது இந்து கோவில்களை திட்டமிட்டு அழிக்கும் முயற்சி என்றும் அவர் கடுமையாக சாடினார்‌.

இந்நிலையில் அந்த கோவிலின் அறங்காவலராக நியமிக்கப்பட்ட நர்கீஸ் கான் தற்போது தன்னுடைய பெயருக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தன்னுடைய தந்தை பெயர் தங்கராஜ் எனவும் அவர் ஒரு இந்து தான் எனவும் கூறியுள்ளார். அதன் பிறகு தன் தாய்க்கு பிரசவம் மிகவும் சிக்கலான நிலையில் நர்கீஸ் கான் என்ற மருத்துவர் பிரசவம் பார்த்துள்ளார். இதனால்தான் அவருடைய தந்தை அந்த மருத்துவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரின் பெயரான நர்கீஸ் கானை தன்னுடைய மகனுக்கும் வைத்துள்ளார். மற்றபடி நான் இந்து கிடையாது என்று அந்த கோவில் அறங்காவலர் நர்கீஸ் கான் விளக்கம் கொடுத்தார். மேலும் அதோடு இதுபோன்ற தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று இந்த தகவலை தமிழக அரசின் உண்மை சரி பார்ப்பு கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.