டெல்லி நகரில் அதிர்ச்சியூட்டும் ஏடிஎம் மோசடி சம்பவம் ஒன்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். வடகிழக்கு டெல்லி ஹர்ஷ் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணத்தை நிரப்பும் பொழுது, இரண்டு ஊழியர்கள் திட்டமிட்டபடி மோசடி செய்துள்ளனர்.

ரூ.100 நோட்டு தட்டில் ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை  வைத்துள்ளனர். இதனால், ஏடிஎம் பயனர்களுக்கு அதிக பணம் வெளியே வந்திருக்கிறது. இதைத் தனக்குத் தெரிந்த 112 ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களிடம் பகிர்ந்த அவர், அவர்களிடம் பணம் எடுக்கச் சொல்லியிருக்கிறார். இதில் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 1ஆம் தேதி நடந்த இந்த சம்பவம், ஏடிஎம் பணத்தைக் கணக்கீடு செய்யும் நேரத்தில் தெரியவந்தது. பணம் தவறாக எடுக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிளை மேலாளர், இரண்டு ஊழியர்களுக்கும் எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையின் போது, அவர்கள் இருவரும் வேண்டுமென்றே ரூபாய் நோட்டு தட்டுகளை மாற்றி, கார்டு வைத்திருப்பவர்களின் உதவியுடன் பணம் எடுத்ததாக தெரியவந்துள்ளது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறுவனம் அளித்த புகாரில், ஏடிஎம் பெட்டகத்தின் சாவி, நிர்வாக அட்டை, கடவுச்சொல் போன்றவை பாதுகாவலரிடம் இருப்பதாகவும், பணம் ஏற்றும் ஒவ்வொரு கட்டத்திலும் இருவர் நியமிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் 29ஆம் தேதி ரூ.31 லட்சம் ஏடிஎம்மில் ஏற்றப்பட்டது.

ஆனால், ரூ.100 நோட்டு தட்டில் ரகசியமாக ரூ.500 மற்றும் 2000 நோட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்குப் பிறகு 100 ரூபாய் நோட்டுகள் தட்டுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாத நிலை உருவாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைப்பற்றி விளக்கம் அளித்த ஒரு ஊழியர், இது தவறுதலாக நடந்ததாகவும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலையை விரைவாக முடிக்க முயற்சிக்கும்போது தானாகவே தவறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால், நிறுவனம் இதனை திட்டமிட்ட மோசடியாகவே காண்கிறது. பணத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.