உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 25 வயது இளம்பெண் ஒருவரிடம், அவரது புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப் பாலியல் லஞ்சம் கேட்ட காவலர் இம்ரான் கான் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே திருமண ஆசை காட்டி ஏமாற்றிய நபர் மீது புகார் அளிக்கக் குவார்சி காவல் நிலையத்தை அணுகியிருந்தார்.
அப்போது அந்தப் புகாரை விசாரிக்க வேண்டிய காவலர் இம்ரான் கான், அந்தப் பெண்ணிற்குத் தொடர்ச்சியாகத் தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுத்து, ஆபாசமான கோரிக்கைகளை முன்வைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காவலர் இம்ரான் கான் அந்தப் பெண்ணிடம் பேசிய தொலைபேசி உரையாடல்கள் ஆதாரமாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில், தனக்கு ஆபாசப் புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்றும், தன்னுடன் விடுதிக்கு வர ஒப்புக்கொண்டால் மட்டுமே குற்றம் சாட்டப்பட்ட நபரைச் சிறைக்கு அனுப்புவேன் என்றும் அவர் பேரம் பேசியுள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தை வெளியே சொன்னால் அந்தப் பெண்ணையே சிறைக்கு அனுப்பி விடுவதாகக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மூத்த காவல் கண்காணிப்பாளர் நீரஜ் குமார் ஜாதவ் அந்த காவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, அவர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
