தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அகரம் காலனி தெருவில் சந்திரலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் தங்கி இருந்து வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அப்போது நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாற்று சமுதாய பெண்ணான தேவிகலாவை சந்திரலிங்கம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பகுதியில் வசிக்கும் லிங்கராஜா என்பவருடன் தேவி கலா பேசி வந்துள்ளார். அதன் பிறகு அவரது நடவடிக்கை சரியில்லாததால் தேவி கலா அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

நேற்று காலை 9:30 மணிக்கு தேவி கலா தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த லிங்கராஜா ஏன் என்னிடம் பேசுவதில்லை என கேட்டு தகராறு செய்துள்ளார். தேவி கலா அதற்கு சரியாக பதில் சொல்லாததால் கோபத்தில் லிங்கராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவி கலாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த தேவி கலாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவிகலா உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து லிங்கராஜாவை தேடி வருகின்றனர்.