
கர்நாடகாவின் பெங்களூருவில் சிகரெட் வாங்கி வர மறுத்ததற்காக, மென்பொருள் பொறியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 10ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில், 29 வயதான சஞ்சய் தனது நண்பர் சேதனுடன் கோலான்குண்டே கிராஸ் சுப்பிரமண்ய வியாப்தியில் தேநீர் குடிக்க சாலையோரத்தில் நின்றிருந்தபோது, கிரெட்டா காரில் வந்த 31 வயதான பிரதீக் சிகரெட் வாங்கி வரும்படி கேட்டதாக கூறப்படுகிறது.
View this post on Instagram
சஞ்சய் அதனை மறுத்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். பிரதீக் அந்த இடத்தை விட்டு வெளியேறினார். ஆனால் சஞ்சய் மற்றும் சேதன் பைக்கில் அலுவலகம் நோக்கி புறப்பட்ட போது, பின்னால் வந்த பிரதீக், இருசக்கர வாகனத்தின் மீது காரை ஏற்றினார்.
இந்த விபத்தில் சஞ்சய் பலத்த தலையிறுத்துக் காயம் அடைந்து, மூன்று நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு மே 13 அன்று மருத்துவமனையில் உயிரிழந்தார். சேதனும் பலத்த காயத்துடன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரதீக் சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி காட்சிகள் மற்றும் நண்பரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.