சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் பழைய வீட்டை இடித்து கட்டுமானப் பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் ஓட்டுநர் மீது பணம் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கேட்டு கொலைவெறித் தாக்குதல் நடத்திய தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஜெய் கிருஷ்ணன் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில், கட்டுமானப் பணியில் இருந்த தொழிலாளர்களிடம் ஜெய் கிருஷ்ணன் இலவசமாக செங்கல் மற்றும் ஜல்லி தருமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு கட்டிட உரிமையாளரும், பொக்லைன் ஓட்டுநரான அழகுதுரையும் மறுப்புத் தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த ஜெய் கிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அவர்கள் மீது கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பான சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தவெக தலைமைக்குச் சென்றதைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்குப் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி, செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் (இணை அமைப்பாளர்) பொறுப்பு வகித்து வந்த ஜெய் கிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அதிரடியாக நீக்கப்படுவதாக தவெக தலைமை அறிவித்துள்ளது. பொதுமக்களை மிரட்டுபவர்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது தவெக தலைவர் விஜய் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்பதை உணர்த்தும் வகையில் இந்த உடனடி நீக்க நடவடிக்கை அமைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
