மதுரையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்த ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், நிகழ்ச்சி முடிந்த கையோடு அரசு விருந்தினர் மாளிகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் காவல் ஆணையர் ராஜேந்திரன் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளது தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சந்திப்பில் இவர்களுடன் மற்ற பிற அரசு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த அதிரடி ஆலோசனைக் கூட்டம் நீடித்துள்ளது.

​அரசு நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு சம்பந்தமாக இந்த ஆலோசனையில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஆளுநரின் இந்தத் திடீர் தென்மாவட்ட விசிட்டும், உயர் அதிகாரிகளுடனான ரகசிய சந்திப்பும் தமிழக அரசு வட்டாரத்தில் உற்று நோக்கப்பட்டு வருகிறது. ஆளுநரின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனை கூட்டங்களின் பின்னணியில் ஏதேனும் பெரிய அரசியல் நகர்வுகள் இருக்கிறதா என்ற கோணத்தில் சோஷியல் மீடியாக்களில் தற்பொழுது விவாதங்கள் தீயாய் பரவி வருகின்றன.