எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுகவின் வாக்கு வங்கியை முந்த முடியாது என்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக மக்களுடைய மனநிலையை நன்றாக புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் திராவிட மாடல் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

நான் 2 நாட்களுக்கு முன்பாக பேசும் போதே கூறி இருந்தேன், அதிமுக தற்போது இபிஎஸ் கட்டுப்பாட்டில் இல்லை, அதனை இங்கே இருப்பவர்கள் பேசிக் கொள்வதிலேயே நன்றாக தெரிந்து கொள்ளலாம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தன்னுடைய நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அதிமுக தலைவர் இ பி எஸ், வேலுமணி, தங்கமணியாக இருந்தாலும் எல்லோருமே எனக்கு ஜூனியர்கள் தான் என்று சொன்னதாக தகவல் வந்துள்ளது.

இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு ஆதங்கத்தில் இருக்கின்றார் என்பதையும் அங்கு இருக்கும் சீனியர்கள் எந்த அளவுக்கு ஆதங்கத்தில் இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அதிமுக கலகலத்துக் கொண்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டு தான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் முதல் முறையாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தவர்கள் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளார்கள் என்பது.

கண்ணுக்குத் தெரிந்தவரை எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா கூறியிருந்தார். நாங்கள் எதிரிகள் இல்லை என்று சொல்லவில்லை, எதிரிகள் இருக்கின்றன. அவர்களுடைய வாக்கு வங்கி குறைந்துள்ளது என்று தான் சொல்கின்றோம். எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி அனைத்தும் சேர்ந்து வந்தாலும் திமுக வாக்கு வங்கியை மிஞ்ச முடியாது. அதற்கு ஏற்றது போல மக்கள் விரும்பக் கூடிய ஆட்சியை தான் முதல்வர் ஸ்டாலின் நடத்தி வருகின்றார் என்று ரகுபதி பெருமையாக பேசியுள்ளார்.