பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி (Maruti Suzuki) தற்போது நுகர்வோர் நீதிமன்ற உத்தரவு ஒன்றை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. E20 பெட்ரோல் பயன்படுத்தியதால் காரின் எஞ்சின் பழுதாகிவிட்டதாகக் கூறி வாடிக்கையாளர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், அவருக்குப் புதிய கார் வழங்க வேண்டும் என்று ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த உத்தரவுதான் தற்போது மாருதி நிறுவனத்தால் மேல்முறையீடு செய்யப்படவுள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது காரில் E20 பெட்ரோல் போட்ட பிறகு எஞ்சின் பழுதடைந்துவிட்டதாகக் கூறி நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த ராய்ப்பூர் நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்குப் புதிய காரை மாற்றி வழங்குமாறு மாருதி சுசுகி நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவு பல முக்கிய உண்மைகளை ஆராயாமல் அவசர அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று மாருதி நிறுவனம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மாருதி சுசுகி நிறுவனம், “பாதிக்கப்பட்ட காரில் இருந்து சேகரிக்கப்பட்ட பெட்ரோல் மாதிரிகளை ஆய்வு செய்தபோது, அதில் கடுமையான கலப்படம் இருந்தது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.
இந்த கலப்பட பெட்ரோல் ஆதாரத்தை நீதிமன்றம் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டது. காரின் உற்பத்தி குறைபாட்டால் எஞ்சின் பழுதாகவில்லை, கலப்பட பெட்ரோலால் மட்டுமே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
பல முக்கிய அறிவியல் பூர்வமான உண்மைகளையும், தங்களுக்குச் சாதகமான ஆதாரங்களையும் நீதிமன்றம் முழுமையாகப் பரிசீலிக்காமல் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளதால், இதனை எதிர்த்து அடுத்தகட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு (Appeal) செய்யப் போவதாக மாருதி நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. கார் எஞ்சின் பழுது மற்றும் நுகர்வோர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பான இந்த விவகாரம் தற்போது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
