திமுக தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் “அதிமுக டெல்லியின் அடிமை” என்ற விமர்சனத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மிகக் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளார். “தமிழகத்தில் உள்ள என்டிஏ (NDA) கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை தாங்குகிறது என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம்” என அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், “வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நான்தான் முதல்வர் வேட்பாளர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே தெளிவாகக் கூறிவிட்டார்; இதில் ஒளிவுமறைவு எதுவுமில்லை” எனத் தனது தலைமைத்துவத்தை அவர் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.

​தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து “தமிழகம் Vs டெல்லி” என்று பேசி வருவதைச் சுட்டிக்காட்டிய EPS, “நடப்பது என்னவோ சட்டமன்றத் தேர்தல், ஆனால் அவர் ஏதோ டெல்லி தேர்தல் நடப்பது போலத் தவறான பிம்பத்தை உருவாக்கி வருகிறார்” எனச் சாடினார். “நாங்கள் டெல்லிக்குச் சென்றால் ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு பயம் வருகிறது? அந்தப் பயமே இப்போது அவர்களைத் தவறாகப் பேச வைக்கிறது” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக-வின் நீண்டகால விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்த எடப்பாடியாரின் இந்தப் பேச்சு, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 தேர்தல் களம் இப்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது!