தமிழகத்தில் புதிய அரசு அமைவதற்கு தவெக-வுக்கு ஆதரவு அளித்த விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாகச் செயல்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது பகிரங்க ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது, மீண்டும் ஒரு மறுதேர்தல் வந்து மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையிலேயே தவெக-வுக்கு ஆதரவு தருவது என இடதுசாரிகளும் தங்களது விசிக-வும் முடிவெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கூட்டணியில் இருக்கும் ஒரு பெரிய தேசியக் கட்சியான காங்கிரஸ், ‘இந்தியா’ பிளாக்கில் இருக்கும் தங்களை ஒருங்கிணைத்துச் செயல்பட்டிருக்க வேண்டும் என்று திருமா சாடியுள்ளார். ஒரு ‘காமன் மினிமம் புரோகிராம்’ (Common Minimum Program) தயாரித்து, அதன் மூலம் விஜய் அவர்களிடம் சில முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து, அதில் உடன்பாடு கண்ட பின்பே அனைவரும் இணைந்து ஆதரவை அறிவித்திருக்க வேண்டும் என்பது தனது சஜஷனாக இருந்தது என்றும், ஆனால் காங்கிரஸ் அடுத்த நாளே நேரடியாகச் சென்று ஆதரவுக் கடிதத்தைக் கொடுத்துவிட்டது என்றும் அவர் அதிரடியாக உடைத்துப் பேசியுள்ளார்.
