தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இடதுசாரிகளிடமும் விசிகவிடமும் ஆதரவு கோரியிருப்பது இப்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசிக முன்னாள் எம்.எல்.ஏ சிந்தனைச் செல்வன் மிகக் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார். “விசிகவில் திருமாவுடன் சேர்த்து வெறும் 20 பேர் மட்டுமே இருப்பதாகக் கிண்டல் பேசிவிட்டு, இப்போது எந்தத் தார்மீக அடிப்படையில் அதே விசிகவிடம் ஆதரவு கேட்கிறீர்கள்? உங்களுக்குக் கூசவில்லையா?” என அவர் விஜய்யை நேரடியாகச் சாடியுள்ளார்.
கூட்டணி குறித்துப் பேசும்போது எந்தவித தர்க்க நியாயமும் இல்லாமல் தவெக செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், இடதுசாரிகளையும் விசிகவையும் ஆதரவுக்கு அழைப்பது சுயநல அரசியல் என விமர்சித்துள்ளார். “அன்று விமர்சனம், இன்று ஆதரவா?” எனச் சிந்தனைச் செல்வன் எழுப்பியுள்ள இந்தத் தார்மீகக் கேள்வி, தவெக மற்றும் விசிக தொண்டர்களிடையே சமூக வலைதளங்களில் ஒரு பெரிய யுத்தத்தையே தொடங்கி வைத்துள்ளது.
