
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கதம்பர் கோவில் தெருவில், பூஜை பொருட்கள் கடையில் தாய் மகள் இருவர் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
குளித்தலை வைகநடல்லூர் அக்கரவகாரம் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம், கடந்த ஆண்டு கதம்பேஸ்வரர் கோவிலில் ஏலம் எடுத்து பூஜை பொருட்கள் விற்பனை செய்தவர். இந்த ஆண்டு கோவிலில் ஏலம் எடுக்காமல், கோவிலுக்கு அருகில் உள்ள வாடகை கட்டிடத்தில் தனது கடையை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
இந்த இடத்தில் தற்போது லட்சுமி என்ற பெண், கோவில் நிர்வாகத்திடம் 16 லட்சம் ரூபாய் ஏலம் எடுத்து, கோவில் உள்ளே பூஜை பொருட்கள் கடை நடத்தி வருகிறார். இதற்கிடையில், தன்னுடன் போட்டியாக வெளியே கடை நடத்துகிறாரெனக் கோபமடைந்த லட்சுமி, தனது மகளுடன் சேர்ந்து, மோகனசுந்தரத்தின் கடைக்குள் புகுந்து கண்ணாடி சோக்கேஸ், ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், பூஜை பொருட்களையும் வீசி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைக்கு வெளியே நின்றபடியே, “நான் 16 லட்சம் ஏலம் எடுத்தேன்… லஞ்சம் கொடுத்தேன்…” என திட்டி பேசும் காட்சிகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக மோகனசுந்தரம் தனது செல்போனில் வீடியோ எடுத்து, குளித்தலை காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்துள்ளார்.
இவ்வாறு தாய் மகள் இருவரும் கடைக்குள் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது, அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.