உலகம் முழுவதும்  பண வீக்க  அபாயத்திலிருந்து  வெளியேறுவதற்காக மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது. அந்த வகையில் ஸ்விக்கி, கூகுள், அமேசான், spotify போன்ற பல்வேறு நிறுவனங்களும் பணி நீக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தினால் சமீபத்தில் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பயிற்சியில் நடத்தப்பட்ட மதிப்பீட்டு தேர்வில் சுமார் 600 பேர் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஊழியர் ஒருவர் கூறியதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் என்னுடன் 150 பேர் பணியில் இணைந்தோம். ஆனால் அதில் 60 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றோம். மீதமுள்ள அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். விப்ரோ நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடக்கநிலை ஊழியர்கள் 450 பேரை பணிநீக்கம்  செய்தது. இந்நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனமும் பணிநீக்கம் செய்திருப்பது ஐ டி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டு தொடங்கியது முதல் 308 நிறுவனங்களை சேர்ந்த 95508 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பிரபல லே ஆஃப் வலைதளத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.