தேனி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக தேனியில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, டிடிவி தினகரனை குறி வைத்து காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறது. இதிலிருந்தே டிடிவி தினகரனின் வெற்றி உறுதியாகிவிட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சி செய்தார்.

இந்த விவகாரத்தில் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை முன்வைத்தது. அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மந்திரி ஜெயராம் போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறினார். ஒருவேளை மீறி போராட்டம் நடத்தினால் 2ஜி வழக்கில் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் கைது செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்ததால் கருணாநிதி போராட்டத்தை மேற்கொள்ளாமல் அப்படியே அந்த பிரச்சனையை விட்டுவிட்டார்.

இதேபோன்று பல விஷயங்களில் தமிழ்நாட்டின் உரிமையை அவர் விட்டுக் கொடுத்துவிட்டார். திமுக கட்சியின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனே  30,000 கோடி ஊழல் செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த பணத்தை தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தற்போது 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. திமுகவினர் பணம் கொடுக்க வரும்போது மக்கள் கஞ்சா விற்ற பணம் எங்களுக்கு தேவை இல்லை என்று சொல்ல வேண்டும். மத்திய அரசு செய்த நன்மைகளை எல்லாம் மறைத்து திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்று கூறினார். மேலும் ஊழல் பணத்தை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.