மத்திய சிறையில், திரு முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை..

2006-2011 ஆம் ஆண்டு நடந்த திமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், திமுக அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, மேல்முறையீடு செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், உயர்க்கல்வித்துறை அமைச்சர், எம்எல்ஏ ஆகிய பதவியையும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் இழக்கிறார். இதன் மூலம் தண்டனை காலம் 3 ஆண்டுகள், அதன் பிறகு 6 ஆண்டுகளுக்கு என மொத்தமாக அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. இந்த தீர்ப்பு திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் திரு செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் திரு பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார். திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், திரு முக ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது” என தெரிவித்துள்ளார்..