கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பத்திகவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலணியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நரேந்திரன் என்பவர் தனது பெயரில் இருந்த நிலத்தை கோவிலுக்கு வழங்க முடிவு செய்தார். அந்த பகுதி மக்கள் நிலத்தை வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை முன் பணமாக கொடுத்தனர். இதனையடுத்து பெட்டபள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திம்மராயன் என்பவர் மூலமாக சிவக்குமார், நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிலங்களை விலைக்கு வாங்கினர். அந்த நிலத்திற்கு பிரகாஷ் முள்வேலி அமைப்பதற்கு சென்றுள்ளார். அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் திம்மராயன் உள்பட 3 பேரின் குடும்பத்தினரை பொதுமக்கள் ஊரை விட்டு விலக்கி வைத்து வீடுகளுக்கு செல்லும் வழி பாதையை முள்வேலி போட்டு அடைத்தனர். அவர்களுடன் யார் பேசினாலும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திம்மராயன் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வீட்டிற்கு செல்லும் வழி பாதையில் இருந்த முள்வேலியை அகற்றினர். இதனையடுத்து மூன்று குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த மாதேஷ், பழனி, மாரியப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.