
இன்றைய காலகட்டத்தில்ஆன்லைன் மோசடிகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ்அப் பயனர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தெரியாத நபர்களிடமிருந்து வரும் புகைப்படங்களை கிளிக் செய்தால், அது உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யக்கூடிய அளவுக்கு ஆபத்தாக அமைந்து வருகிறது.
சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ஒரு புதிய வகை புகைப்பட மோசடி பரவி வருகிறது. இதில், ஏதாவது சலுகை அல்லது விழா தொடர்பான புகைப்படங்களை அறிமுகம் இல்லாத எண்ணிலிருந்து அனுப்புகிறார்கள். அந்த புகைப்படங்களை கிளிக் செய்வதன் மூலம், உங்கள் மொபைலில் தீம்பொருள் (malware) நிறுவப்பட்டு விடுகிறது.
இது ஹேக்கர்களுக்கு உங்கள் மொபைல் சாதனத்தையும், வங்கி விவரங்களையும், கடவுச்சொற்களையும் முழுமையாக அணுக அனுமதிக்கிறது. மேம்பட்ட தாக்குதல்களில், இரண்டு காரணி பாதுகாப்பை (2FA) கூட முறியடித்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருடக்கூடிய நிலை உருவாகிறது.
இதிலிருந்து தப்பிக்க தெரியாத எண்ணிலிருந்து வரும் புகைப்படங்களை கிளிக் செய்ய வேண்டாம். வாட்ஸ்அப் அமைப்புகளில் ‘Auto-download’ விருப்பத்தை முடக்குங்கள். சந்தேகமுள்ள நபர்களை உடனடியாக ‘Block’ செய்து, வாட்ஸ்அப்பில் ‘Report’ செய்யவும். உங்கள் மொபைலில் நம்பகமான வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவி வைத்திருங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், வாட்ஸ்அப்பில் ஒரு சிறிய தவறான கிளிக்கே உங்கள் வங்கிக் கணக்கை காலியாக்கக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, விழிப்புடன் இருப்பதே பாதுகாப்பு. எனவே இதுபோன்ற மோசடிகளிருந்து கவனமாக இருங்கள்.