தமிழகம் முழுவதும்  உள்ள 25 உழவர் சந்தைகள் உள்ளது. இந்த உழவர் சந்தைகளில்  சிறுதானிய கூழ் வகைகள், சிற்றுண்டிகள், மூலிகை சூப் வகைகளுடன் தொன்மை சார் உணவகங்கள் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தேனி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட உள்ளது.

அதிகாலை 4 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை மட்டுமே இந்த உணவகங்கள் நடத்த வேண்டும் என்றும், பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட சூப் வகைகள், சிறுதானிய கூழ் வகைகள், புவிசார் குறியீடு பெற்ற உணவுப் பொருட்கள், கருப்பட்டி காபி, பதநீர் போன்ற உணவு வகைகள் விற்பனை செய்ய வேண்டும். உணவகத்திற்கு இலக்கிய நயம் வாய்ந்த பெயர்கள் சூட்டப்பட்டு பெயர் பலகையில் எழுத வேண்டும்.

உணவு பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெற்று அதன்படி உணவகம் நடத்த வேண்டும். இந்த உணவகத்தில் விவசாயிகள், நுகர்வோருக்கு எந்தவித இடையூறும் இருக்க கூடாது. இங்கு பாரம்பரிய பாக்கு மட்டை தட்டு வகைகள், வாழை இலைகள் மற்றும் எளிதில் மக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்த வேண்டும். நெகிழியிலான பைகள், தட்டுகள் தம்ழர்களை பயன்படுத்தக்கூடாது.

தொன்மை சார் உணவகங்களை நடத்துவதற்கு உழவர் உற்பத்தியாளர், நிறுவனங்கள் மற்றும் குழுக்கள், சுய உதவி குழுக்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஒரு உழவர் சந்தைக்கு ஒரு தொன்மை சார் உணவகம் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது.