அமெரிக்காவின் கோடீஸ்வரரும், பாலியல் குற்றச்சாட்டுகளில் கைதாகி சிறையில் மரணமடைந்தவருமான ஜெப்ரி எப்ஸ்டீனின் மரணம் குறித்து மீண்டும் புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரபல தடயவியல் நிபுணர் டாக்டர் மைக்கல் பேடன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் விசாரணை கைதியாக இருந்தபோது ஜெப்ரி எப்ஸ்டீன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவப் பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. ஆனால், எப்ஸ்டீனின் குடும்பம் சார்பில் பிரேதப் பரிசோதனையை நேரில் பார்வையிட்ட டாக்டர் மைக்கல் பேடன், இந்த முடிவை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் லண்டன் நாளிதழ் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, எனது ஆய்வின்படி, எப்ஸ்டீனின் மரணம் தூக்கிலிடப்பட்டதால் ஏற்பட்டதல்ல; அது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மரணமாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. பிரேதப் பரிசோதனையின் போது கண்டறியப்பட்ட கழுத்து எலும்பு முறிவுகள், தற்கொலையை விட ஒரு கொலையையே அதிகம் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த 2025 டிசம்பர் மாதம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ரகசிய ஆவணங்களின்படி, எப்ஸ்டீனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் “மரணத்திற்கான காரணம்” என்ற பகுதி நீண்ட நாட்களாக முடிவு அறிவிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
மேலும், பிரேதப் பரிசோதனையின் போது நேரில் இல்லாத மருத்துவ அதிகாரி டாக்டர் பார்பரா சாம்சன், பின்னர் அவசரகதியில் இது ‘தற்கொலை’ என்று சான்றிதழ் அளித்ததாக டாக்டர் பேடன் குற்றம் சாட்டியுள்ளார்.
எப்ஸ்டீனின் கழுத்தில் மூன்று இடங்களில் எலும்பு முறிவுகள் இருந்தன. 50 ஆண்டு கால அனுபவத்தில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட ஒருவருக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தாம் கண்டதே இல்லை என்று டாக்டர் பேடன் தெரிவித்துள்ளார்.
சிறையில் தூக்கிடப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கயிறும், எப்ஸ்டீனின் கழுத்தில் இருந்த காயமும் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி வரும் நிலையில், தற்போது தடயவியல் நிபுணரின் இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இது தற்கொலை என்று முடித்திருந்தாலும், தற்போது கிடைத்துள்ள புதிய ஆதாரங்களின் அடிப்படையில் உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
