முன்னாள் மிஸ் இந்தியா அழகியும், பாலிவுட் நடிகையுமான சொலினா ஜெட்லி, தனது கணவரிடமிருந்து விவாகரத்து மற்றும் குழந்தைகளின் காவலைப் பெறுவதற்காக நடத்தி வரும் சட்டப் போராட்டம் தற்போது மிகுந்த வேதனையான கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஆஸ்திரியா சென்றிருந்த சொலினா ஜெட்லி, அங்கு தனது மறைந்த மகன் ஷம்ஷேரின் கல்லறையில் அமர்ந்து கதறி அழுத வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். “ஒரு தாயாக எனது இந்த வலியை உலகுக்குச் சொல்ல இந்த வீடியோவைத் தவிர வேறு வழியில்லை” என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Celina Jaitly (@celinajaitlyofficial)

 

அவர் பகிர்ந்துள்ள தகவலின்படி குழந்தையை சந்திக்க நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், கணவர் பீட்டர் ஹாக் தனது குழந்தைகளை ரகசியமான ஓரிடத்தில் வைத்துள்ளார் என்றும், சொலினாவை அவர்களைச் சந்திக்க அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் மாதம் திருமண நாளன்று பரிசு தருவதாகக் கூறி என்னை தபால் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு விவாகரத்து நோட்டீஸை கணவர் வழங்கினார். எனது சொத்துக்களைப் பறிப்பதிலேயே அவர் குறியாக உள்ளார் என்று சொலினா குற்றம் சாட்டியுள்ளார்.

குழந்தைகளின் மனதைக் கலைத்து, தாய்க்கு எதிராக அவர்களைத் திருப்புவதாகவும், தன்னுடன் தொடர்பு கொள்ளவிடாமல் தடுப்பதாகவும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். சொலினா ஜெட்லி மற்றும் பீட்டர் ஹாக் தம்பதிக்கு 2011-இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு குழந்தைகள் (இருமுறை இரட்டையர்கள்). இதில் 2017-இல் பிறந்த ஷம்ஷேர் என்ற குழந்தை இதயக் கோளாறு காரணமாக உயிரிழந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே தனது கணவர் மீது சொலினா கடுமையான புகார்களை முன்வைத்திருந்தார். தன்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்த அவர், ரூ. 50 கோடி நஷ்டஈடு மற்றும் ரூ. 10 லட்சம் பராமரிப்புத் தொகை கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார். தற்போது தனது மூன்று குழந்தைகளின் காவலைப் பெறவும், நீதிக்காகவும் ஆஸ்திரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) அவர் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்.