திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியில் அயன் சங்கம்பட்டி பகுதியில் மாரிமுத்து (26) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சவுண்ட் சர்வீஸ் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் ஒரு 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த அந்த சிறுமியும் மாரிமுத்துவை காதலித்த நிலையில் இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் மாரிமுத்து மீது போலீசில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி போலீசார் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் கடந்த 7-ம் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு மில் அருகே சிறுமி இறந்து கிடந்த நிலையில் அதன் அருகே மாரிமுத்து அமர்ந்திருந்தார். மாரிமுத்து நேற்று முன்தினம் மாலை வரை சிறுமியின் சடலத்துடன் அமர்ந்திருந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் அதனை பார்த்து போலீசுக்கு தகவல் கொடுக்கவே பின்னர் போலீசார் அந்த இடத்திற்கு வந்து சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மாரிமுத்து பல அதிர்ச்சி தகவல்களை கூறினார்.

அதாவது சிறுமியை காதலிப்பதற்காக மாரிமுத்து ஏராளமான பணம் செலவு செய்துள்ளாராம். அந்த சிறுமி உயிருக்கு உயிராக காதலிப்பதாக கூறி அடிக்கடி பலருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இது பற்றி கேட்பதற்காக மாரிமுத்து சிறுமியை அழைத்த நிலையில் அவர் அலட்சியமாக பதில் கூறியதால் ஆத்திரத்தில் துண்டை வைத்து கழுத்தை நெரித்து கொன்றதாக கூறினார். இவர் மீது ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு ஒரு கட்டிட தொழிலாளியை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.