தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதாவது மும்மொழி கல்வி கொள்கை, ஹிந்தியை திணிப்பதாக தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. தமிழக அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதால் கல்விக்கான 2000 கோடி நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக பாஜக மற்றும் திமுக இடையே தமிழகத்தில் கருத்து மோதல் என்பது நிலவும் நிலையில் இது தொடர்பாக தற்போது உத்திர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்

இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மொழி சார்ந்த விவாதங்களை உருவாக்கி, அதை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்துகிறார்கள். இதனால் அந்த மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் குறைகின்றன. உ.பி.யில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அதனால் உ.பி. சிறிய மாநிலமாகி விட்டதா? மாறாக, புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன” என்றார்.

யோகி ஆதித்யநாதின் இந்தக் கருத்துக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், எக்ஸ் பக்கத்தில், “உ.பி.யில் தமிழில் பாடம் கற்பிக்க எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர்? எத்தனை மாணவர்கள் தமிழை விருப்ப மொழியாக தேர்வு செய்துள்ளனர்?” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும், “தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு இந்தி கட்டாயம் இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தமிழ் அறியாமலே வருகிறார்கள். இந்தி திணிப்பை நிறுத்த வேண்டும்” என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார். இந்த விவாதம் அரசியல் மட்டுமல்லாது, மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிய முக்கியத்துவமும் கொண்டதாகும்.