
சென்னை நந்தனம் பகுதியில் இருக்கும் தனியார் வங்கியில் தினேஷ் என்பவர் சேல்ஸ் மேனேஜராகவும் சதீஷ் என்பவர் சேல்ஸ் பிரிவு ஊழியராகவும் வேலை பார்த்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ் நன்னடத்தை விதி மீறல் காரணமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டார். தனது வேலை போனதற்கு தினேஷ் தான் காரணம் என நினைத்து கடந்த பல மாதங்களாக சதீஷ் அவரை தேடி வந்தார். தினேஷ் தியாகராய நகர் பர்க்கிட் சாலையில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே சதீஷ் அந்த வங்கியில் நோட்டமிட்டு வந்தார். நேற்று முன்தினம் சதீஷ் திடீரென வாடிக்கையாளர் போல் வங்கிக்குள் நுழைந்து தினேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உன்னால தாண்டா என் வாழ்க்கை வீணா போச்சு என தினேஷை கத்தியால் வெட்டியுள்ளார். அவரது காது வெட்டப்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே சக ஊழியர்கள் தினேஷை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.