கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குன்னிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமி நியா ஃபைசல், தெருநாய் கடித்ததால் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரு வாத்தை காப்பாற்ற முயன்றபோது தெருநாய் கடித்ததால்  இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

சாட் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று சிறுமி  உயிரிழந்தார். கடந்த ஒரு மாதத்திலேயே கேரளாவில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 3-வது குழந்தை நியா.

ஏப்ரல் 8ஆம் தேதி வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த நியா, ஒரு தெருநாய் வாத்தை தாக்க முயன்றதை கண்டதும் அதனை காப்பாற்ற ஓடியபோது, அந்த தெரு நாய் சிறுமியின் முழங்காலில் கடித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக விலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி வழங்கப்பட்டு, ரேபிஸ் நோய் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 11 மற்றும் 15 ஆகிய தேதிகளில் 2-ஆம் மற்றும் 3-ஆம் தடுப்பூசி ஊசிகள் போடப்பட்டன.

இறுதி தடுப்பூசி மே 6ஆம் தேதி அளிக்கப்பட வேண்டியிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே நியாவிற்கு காய்ச்சலும், கடிக்கப்பட்ட இடத்தில் வலியும் ஏற்படத் தொடங்கியது. இதையடுத்து, அவர் புனலூர் தாலுக்கா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் சாட் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.