
சென்னையில் திருச்சி சிவா எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், திமுக கட்சியின் மூத்த அமைச்சர்கள் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினார். அவர் பேசியதாவது, உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்ற பிறகு இன்று தான் அவரை நேரில் பார்க்கிறேன். நான் உதயநிதி ஒவ்வொரு செயல்பாடுகளையும் அணு அணுவாக பார்த்து ரசித்தவன். எனக்கு தற்போது அவரைப் பார்த்ததும் பரவசம் வந்துவிட்டது. அவரிடம் மேடையில் தெரிகின்ற சின்ன நகைச்சுவை மற்றும் தனிப்பட்ட முறையில் பார்க்கும்போது அளவற்ற மரியாதை ஆகியவற்றைப் பார்த்து நான் வியந்துள்ளேன்.
நான் எப்போதும் அவரை மதிப்பதற்கு ஒரே காரணம் சொன்ன கருத்தை எந்த காரணத்தை கொண்டும் அவர் பின்வாங்காமல் அந்த கருத்தில் உறுதியாக இருப்பார். இதன் மூலம் கலைஞர் பேரன் ஸ்டாலின் மைந்தன் என்பதை நிரூபித்துள்ளார். ஒருவரை ரசிப்பதற்கு பாவனை மற்றும் உடை போதுமானது. ஆனால் மதிப்பதற்கு கொள்கை மட்டும்தான் வேண்டும். திராவிட இயக்கத்தை கட்டி காப்பதற்கு இளைஞர் ஒருவர் வந்துள்ளார் என்பதை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரோமானிய சாம்ராஜ்யம் என்பது ஒரு நாளில் கட்டப்பட்டது கிடையாது ஒவ்வொரு செங்கலாய் கட்டப்பட்டது என்று ஒரு முதுமொழி உள்ளது. ஆனால் உதயநிதியின் சாம்ராஜ்யம் ஒரே செங்கலால் கட்டப்பட்டது.
அதுவும் மத்திய அரசின் செங்கலால் கட்டப்பட்டது என்று கூறினார். அதாவது 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதன் முதலாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மத்திய அரசாங்கம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு செங்கலை அடிக்கல் நாட்டி விட்டு இன்னும் மருத்துவமனையை கட்டி முடிக்கவில்லை என ஒரு செங்கலை வைத்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்தது. மேலும் அவருடைய செங்கல் பிரச்சாரம் அவருடைய வெற்றிக்கும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.