மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிவபுரி பகுதியில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியின் போது 17 வயது சிறுவன் ஒருவன் மது குடித்துள்ளான். பின்னர் மதுபோதையில் ஒரு 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தான். அதோடு சிறுமியை கொடூரமான முறையில் சித்திரவதையும் செய்தான். இந்நிலையில் உடலில் இரத்த காயங்கள் மற்றும் கொடூரமான காயங்களுடன் மயக்கமான நிலையில் கிடந்த சிறுமியை உறவினர்கள் மீட்டு  உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில், பிறப்புறுப்பில் பலத்த காயம் இருக்கிறது.

 

தாடை மற்றும் தலையில் ஆழமான காயங்கள் இருக்கும் நிலையில் 28 தையல்கள் போடப்பட்டுள்ளது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அந்த சிறுவன் சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான் என்று சிகிச்சை வழங்கி வரும் டாக்டர் கூறியுள்ளார். அதே நேரத்தில் சிறுமியின் உயிருக்கு ஆபத்து இல்லை. இந்த சம்பவத்திற்கு மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும் என்று உறுதி கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் சிறுவனாக இருந்தாலும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள்.