சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் குளத்துமேடு வேம்புலி அம்மன் கோவில் ஐந்தாவது தெருவில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஹோமிதா(19) தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ஹோமிதா பல்லாவரம்- குரோம்பேட்டை இடையில் தண்டவாளத்தில் உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது அதே பகுதியில் இருக்கும் டியூஷன் சென்டரில் 9-ஆம் வகுப்பு படிக்கும் போது ஹோமிதாவுக்கும் டியூஷன் ஆசிரியரான அஜய் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. பள்ளி படிப்பை முடித்து கல்லூரி சென்ற பிறகும் ஹோமிதா காதலை தொடர்ந்தார். இதனை அறிந்த பெற்றோர் ஹோமிதாவை கண்டித்தனர். மேலும் செல்போனையும் வாங்கி வைத்துக் கொண்டனர். இதனை அறிந்த அஜய் தனது காதலிக்கு புதிதாக செல்போன் வாங்கி கொடுத்துள்ளார். இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்தனர்.

கடந்த 28-ஆம் தேதி அதிகாலை திடீரென ஹோமிதா காணாமல் போனதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரம் அதிகாலை நேரத்தில் ஹோமிதா எப்படி வெளியே வந்தார்? ஏன் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்து தற்கொலை செய்து கொண்டார்? அஜய் அங்கு வந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.