திருமணம் முடிந்தும் கணவன் – மனைவி இடையே (உடலுறவு) தாம்பத்தியம் இல்லையென்றால், அந்தத் திருமண பந்தம் பெயரளவிலானது எனக் கூறி, அதனை ரத்து செய்து புனே குடும்ப நல நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடனான திருமணத்தை ரத்து செய்யக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இருவீட்டார் சம்மதத்துடன் பதிவுத் திருமணம் செய்துகொண்ட போதிலும், தங்களுக்குள் தாம்பத்திய உறவு ஏற்படவில்லை என்று அந்தப் பெண் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே தனது கணவர் உடலுறவு கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் விலகியே இருந்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டினார். இதனால் மனமுடைந்த அவர், தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று, “தாம்பத்தியம் இல்லாத நிலையில் இந்தத் திருமண பந்தம் அர்த்தமற்றது” எனக் கூறி நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கின் விசாரணையின் போது, கணவர் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், திருமணத்திற்குப் பிறகு தங்களுக்குள் உடல் ரீதியான உறவு எதுவும் ஏற்படவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இரு தரப்பிலும் உண்மை நிலை ஒப்புக்கொள்ளப்பட்டதால், நீண்ட விசாரணை அல்லது குறுக்கு விசாரணை தேவையில்லை என நீதிமன்றம் கருதியது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. கடம் தனது தீர்ப்பில் கூறியதாவது, திருமணம் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு மட்டுமல்ல; அது பரஸ்பர உரிமைகள் மற்றும் கடமைகளை அடிப்படையாகக் கொண்டது. திருமண வாழ்க்கையின் அத்தியாவசியமான அம்சங்கள் (தாம்பத்தியம் போன்றவை) முற்றிலுமாக இல்லாதபோது, அந்தத் திருமணத்தின் நோக்கமே தோல்வியடைந்து விடுகிறது. உண்மைகள் ஒப்புக்கொள்ளப்படும்போது, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நீதிமன்றம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் கொண்டுள்ளது.”

நீண்ட கால சட்டப் போராட்டத்தைத் தவிர்த்து, இரு தரப்பினரின் மனநலனைக் கருத்தில் கொண்டு, இந்தத் திருமணத்தை ரத்து செய்வதாக  நீதிபதி அறிவித்தார். மேலும் உண்மைகள் தெளிவாக இருக்கும்போது, உணர்வுப்பூர்வமான குடும்ப விவகாரங்களில் நீதிமன்றங்கள் காட்டும் இத்தகைய நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறை சட்ட வல்லுநர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.