
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகூர் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. ஒரு பெண்ணை அவருடைய கணவர் கால்களை கட்டி மோட்டார் சைக்கிளுடன் கட்டி இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் 40 வினாடி வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் காயமடைந்த பெண் கதறிக் கொண்டே இழுத்துச் செல்லப்படுவது தெளிவாக உள்ளது. பின்னர் நிறுத்திய கணவர் அவரைப் பார்த்து கர்வத்துடன் நிற்கும் காட்சி பெண்கள் மீதான கொடுமையின் உச்சக்கட்டமாக உள்ளது. இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் யாரும் உதவி செய்யாமல் இருந்தது மிகுந்த வேதனையளிக்கிறது.
இந்த சம்பவம் நடந்த பெண் தனது சகோதரியைப் பார்க்க விரும்பியதால் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இது மணமகளை வாங்கி வந்து திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தின் அடிப்படையில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வீடியோவை படம் பிடித்துவிட்டு உதவி செய்யாத நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளது.