நாட்டில் உள்ள மக்களை மதம் மற்றும் மொழி என்று பிளவுபடுத்தி பாஜக ஆட்சி செய்வதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேச விரோத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் நேரம் நெருங்கி விட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டில் உள்ள மக்களை மதம் மற்றும் மொழி என்று பிளவுபடுத்தி பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பாஜக ஆளாத மாநிலங்களை கவர்னர்களை வைத்து அரசாங்கம் நடத்த முயற்சி செய்கின்றது.

மாநில அரசின் அரசியல் அதிகாரங்களை தன்னகத்தே குவிப்பதற்கு சட்ட வரைவு மசோதாக்களை பாஜக அரசு திருத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் உள்ள மக்கள் இவர்களின் சூழ்ச்சிகளை புரிந்து கொண்டதால் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கூட வெற்றியை கொடுக்காமல் தேர்தலில் விரட்டியடித்து விட்டனர். தினமும் மக்கள் நலனுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி நல்லாட்சி செய்து கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஸ்டாலினின் பெருமையை போற்ற வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளைக் கொண்டிருக்கும் பாஜகவினரின் முகமூடியை மக்கள் தோலுரித்து காட்டினால், ஆளும் தமிழ்நாடு அரசை தேச விரோத அரசு என கூறுவதா? என்று செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.