தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதை பொருள் விற்பனை என்பது அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் காவல்துறையினரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது. போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‌ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகே போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு மாணவர்களை குறி வைத்து போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழும் நிலையில் மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மாணவர்கள் மத்தியில் போதை பொருள் புழக்கம் அதிகரிப்பதாக கூறப்படும் நிலையில் சென்னையில் வீட்டிலேயே ஆய்வகம் அமைத்து கல்லூரி மாணவர்கள் சிலர் போதை பொருள் தயாரிப்பில் ஈடுபட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அதாவது உங்கள் குடும்பத்தில் ஒருவராகவும் உங்கள் தந்தையாகவும் மாணவர்கள் ஆகிய உங்களிடம் நான் மன்றாடி கேட்டு கொள்கிறேன். தயவுசெய்து யாரும் போதை பொருள்களை பயன்படுத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். அதோடு நடிகர் விஜய் சேதுபதியும் மாணவர்கள் போதை பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளதால் மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளியே வரவேண்டும் போதையில்லா தமிழகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.