ஈரோடு வில்வரசம்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் அ.தி.மு.க இடைக்கால பொதுசெயலர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் கருப்பண்ணன், காமராஜ், செங்கோட்டையன் போன்றோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலையுடன் இணைந்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து வருகிற பிப்ரவரி 15,16,17,24 மற்றும் 25 ஆகிய ஐந்து நாட்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பிப்ரவரி 19,20 ஆகிய இரண்டு நாட்கள் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த 83 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் அ.ம.மு.க வேட்பாளர் ஏ.எம் சிவபிரசாத் உள்ளிட்ட ஆறு பேரின் வேட்பு மனுக்கள் திரும்ப பெற்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரால் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கைச்சின்னம், கே.எஸ் தென்னரசு இரட்டை இலை சின்னம், எஸ்.ஆனந்த் முரசு ஆகிய மூன்று பேர் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக போட்டியிடுகின்றார்கள்.