ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தான் ஜெயிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளிவந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூகத்தினர் வாக்கு அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படும் நிலையில், முதலவர் ஸ்டாலின்  மருமகன் சபரீசன்  அண்மையில் முதலியார் சமூகத்தினரை சந்தித்து பேசினார். அதன் பிறகு திமுக கட்சியின் சில முக்கிய அமைச்சர்களும் முதலியார் சமூகத்தினரை பேசி அவர்கள் கேட்டதை நிறைவேற்றி தருவதாக கூறி வாக்கு சேகரித்ததாக தகவல்கள் வெளிவந்தது.

அதன் பிறகு அதிமுகவும் முதலியார் சமூக வாக்குகளை கவர நினைத்தபோது நீங்கள் ஆட்சியில் இருந்தபோது எதுவும் செய்யாமல் தற்போது வந்து கேட்டு என்ன பலன் என்று அவர்கள் கூறி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதலியார் சமூகத்தின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைப்பது கஷ்டம் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதலியார் சமூகத்தை சேர்ந்தவரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளராக நியமித்துள்ள நிலையில், உறவு முறைகளை சொல்லி மேனகா நவநீதன் வாக்கு சேகரிப்பது கவனம் பெற்றுள்ளது. இதனால் மேனகா நவநீதனுக்கு முதலியார் சமூக வாக்குகள் பெருவாரியாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் களத்தில் திமுகவின் கையே தற்போது ஓங்கி இருப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயிப்பதற்கு தான் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மக்களின் முடிவு என்ன என்பதை மார்ச் 2-ம் தேதி வரை பொறுத்து இருந்தது தான் பார்க்க வேண்டும்.