ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்காளர்கள் சிரமம் இல்லாமல் வாக்களிக்கும் விதமாக 52 இடங்களில் 238 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணி சார்பாக  காங்கிரஸ் கட்சி சார்பில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க சார்பில் கே.எஸ் தென்னரசு, அதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன், தே.மு.தி.க சார்பில் எஸ் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு விவி பேட் இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.

அதேபோல் வாக்குச்சாவடி மையங்களில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு தகுந்தாற்போல் சாய்வு தளம் மற்றும் அவர்களுக்கு வீல் சேர்  போன்றவையும் தயார் நிலையில் இருக்கிறது. இந்நிலையில் ஈரோட்டில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதால் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களிக்க சிரமமாக இருக்கும் என்ற காரணத்தினால் 238 வாக்குச்சாவடி மையங்களின் முன்பாகவும் சாமியான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 33 வாக்குச்சாவடிகள் பதற்ற மாணவி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வாக்கு சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேர், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16,140 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் மார்ச் இரண்டாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.