தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி கடந்த 2021-ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பிறகு ஓபிஎஸ்-க்கு அடிமேல் அடி விழுந்தது என்று தான் சொல்ல வேண்டும். கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, உச்சநீதிமன்ற தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்தது என தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வந்த ஓபிஎஸ்-க்கு அவருடைய தாயார் பழனியம்மாளின் மரணம் இன்னும் வேதனையை ஏற்படுத்துவதாக வந்து அமைந்தது. ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், தமாக தலைவர் ஜிகே வாசன், மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, சீமான் போன்றோர் இரங்கல் தெரிவித்த நிலையில், டிடிவி தினகரன், சசிகலா போன்றோர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை.

அதோடு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட நிர்வாகிகள் யாருமே ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மீது விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அதாவது என்னதான் மோதல், பிரச்சினை போன்றவைகள் இருந்தாலும் ஒரு துயரமான நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவினர் யாருமே இரங்கல் தெரிவிக்காதது மோசமான முன்னுதாரணம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.