ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன்பிறகு அதிமுக சார்பில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நேர்மையான முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் வந்த போது தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நியாயமான முறையிலும் நேர்மையான முறையிலும்  நடத்தப்படும் என உறுதி கொடுத்தது. அதோடு கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்கு அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது. மேலும் இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஈரோடு இடைத்தேர்தலில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.