ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், திமுகவினர் பொதுமக்களுக்கு பணம் கொடுத்து காலை முதல் இரவு வரை அவர்களை செட் போட்டு அடைத்து வைப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இந்நிலையில் நேரடியாக களத்தில் சென்று செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை திமுகவினர் வெளியே தள்ளி அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ஆடு மாடுகளை போன்று மக்களை அடைத்து வைத்து அவர்களை மிரட்டி பணம் கொடுத்து வாக்கு வாங்கும் திமுகவின் செயல் மக்களாட்சி முறையை குழி தோண்டி புதைக்கும் செயல்.

இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் தான் தற்போது செய்தியாளர்கள் மீது கூட திமுகவினர் வன்முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். திமுகவின் குண்டர்கள் செய்தியாளர்களையே தாக்குகிறார்கள் என்றால் அவர்கள் சாதாரண மக்களை என்ன பாடு படுத்துவார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை இனியாவது தேர்தல் ஆணையம் சிந்தித்து திமுகவின் அதிகார அத்திமீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் செய்தியாளர்களின் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வலியுறுத்திக் கொள்கிறேன் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.