ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவடைந்த பிறகு மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதன் பிறகு அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பு வேட்பாளரான கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.‌ அதன் பிறகு நாம் தமிழர் கட்சி, தேமுதிக மற்றும் சுயேச்சைகள் பலரும் ஈரோடு கிழக்கில் போட்டியிடுகிறார்கள்.

ஈரோடு கிழக்கில் திமுக, தேமுதிக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் இபிஎஸ் தரப்பு வேட்பாளரான கே. எஸ் தென்னரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த மக்கள் சிலர் நீங்கள் பொறுப்பில் இருந்த போது எதுவுமே செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதோடு கே.எஸ் தென்னரசுவை மார்க்கெட் பகுதிக்குள்  நுழையவிடாமல் வியாபாரிகள் தடுத்து நிறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு மற்றும் அதிமுகவினர் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த சம்பவத்தால் எடப்பாடி பழனிச்சாமி கடும் டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.