அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட சில நாட்களிலேயே, அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக மீண்டும் தனது பாணியில் ஆக்ரோஷமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களிடம் ஈரான் கட்டாயமாகப் பணம் பறிப்பதாக (Money Extortion) டிரம்ப் சாடியுள்ளார். “ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறப்பதாகக் கூறிவிட்டு, அவ்வழியே செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிப்பது வெட்கக்கேடானது; இது ஒப்பந்தத்திற்கு எதிரானது” என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், இதனை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளார். ஈரானின் இந்தச் செயல் ஒப்பந்தத்தின் நோக்கத்தையே சிதைப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கருதுகின்றன.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11-ம் தேதி நடைபெறவுள்ள ஈரான்-அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதற்காக 30 பேர் கொண்ட அமெரிக்க உயர்மட்டக் குழு ஏற்கனவே பாகிஸ்தான் வந்தடைந்துள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு குறித்து ஈரான் உறுதியான வாக்குறுதியை அளிக்க வேண்டும் என்பதில் டிரம்ப் பிடிவாதமாக உள்ளார். இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அறிவித்தாலும், வடக்கு இஸ்ரேலில் பாதுகாப்பு திரும்பும் வரை ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்கள் தொடரும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

இதனால், மத்திய கிழக்கில் போர்நிறுத்தம் நீடிக்குமா அல்லது மீண்டும் பதற்றம் அதிகரிக்குமா என்ற திக் திக் சூழல் நிலவுகிறது.