இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய சமீபத்திய தாக்குதலில், வானிலேயே வெடித்து சிதறி நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைப் பரப்பக்கூடிய ‘கிளஸ்டர் பேலிஸ்டிக்’ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 7 கி.மீ உயரத்தில் இந்த ஏவுகணையின் தலைப்பகுதி வெடித்து, அதிலிருந்து 80-க்கும் மேற்பட்ட சிறிய குண்டுகள் 8 கி.மீ சுற்றளவிற்குப் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, டெல் அவிவ் நகருக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் இந்த குண்டுகள் விழுந்துள்ளதில் 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பிப்ரவரி 28 முதல் தற்போது வரை ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால் இஸ்ரேலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 1000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ‘கதிர்-எஸ்’ (Qadr-S) மற்றும் ‘கோர்ரம்ஷாஹர்’ (Khorramshahr) போன்ற ஏவுகணைகள் இந்த கிளஸ்டர் குண்டுகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டவை என இஸ்ரேலிய வல்லுநர்கள் கருதுகின்றனர்.

​இந்த கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட மிக கொடூரமான ஆயுதங்களாகும். இவை ஒரே இடத்தில் வெடிக்காமல் ஒரு பெரிய பரப்பளவில் பல சிறிய வெடிப்புகளை உண்டாக்குவதால், பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், இதில் விழும் பல சிறு குண்டுகள் உடனடியாக வெடிக்காமல் தரையிலேயே கிடக்கும்; இவை பிற்காலத்தில் கண்ணிவெடிகளைப் போலச் செயல்பட்டு பல ஆண்டுகள் கழித்துக்கூட உயிரைப் பறிக்கக்கூடியவை. ஈரான் இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யா அல்லது சீனாவின் உதவியுடன் உருவாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

2008-ஆம் ஆண்டு கிளஸ்டர் குண்டுகளைத் தடை செய்யும் ஒப்பந்தத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ள போதிலும், ஈரான் மற்றும் இஸ்ரேல் அந்த ஒப்பந்தத்தில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நிலவும் இந்த மோதல் போக்கு, வான்வெளித் தாக்குதல்களைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் போர்க்கப்பல்களை மூழ்கடிக்கும் அளவிற்குத் தீவிரமடைந்துள்ளது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.